Loading...

புதன், 25 ஜனவரி, 2012

கடையநல்லூர் அருகே பரபரப்பு போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தேரை நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் முப்புடாதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் நேற்று(23-ந்தேதி)மதியம் 2மணிக்கு நடந்தது. தேர் முக்கிய வீதிகளின் வழியாகவந்து தென்காசி-மதுரை மெயின் ரோட்டிற்கு வந்தடைந்தது. 





வழக்கமாக தேரை மெயின் ரோட்டில் நிறுத்தி தேங்காய் உடைப்பது வழக்கம். அதேபோல் தேங்காய் உடைப்பதற்காக மெயின் ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டது. 

ஆனால் மெயின்ரோட்டில் தேரை நிறுத்தி தேங்காய் உடைக்கக்கூடாது என்று போலீசார் கூறினர். ஆனால் பொதுமக்களோ, கடந்த 50ஆண்டுகளாக தென்காசி- மதுரை மெயின்ரோட்டில் தேர் நிறுத்தப்பட்டு தேங்காய் உடைத்து வருகிறோம். அந்த நடைமுறையை மாற்ற முயற்சிக்கக்கூடாது என்று கூறினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தேரோட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் தென்காசி-மதுரை மெயின் ரோட்டிலேயே தேரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். 

இந்நிலையில் தேரோட்டத்தில் சிலம்பாட்டம் ஆடிய வாலிபர்களை போலீசார் தடுத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்ற வாலிபரை போலீசார் பிடித்துச்சென்றனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் தென்காசி தாசில்தார் ராசையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் கிருஷ்ணாபுரம் பகுதி சமுதாயத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் பிடித்துச் சென்ற வாலிபரை விடுவிக்க வேண்டும் என்று கூறினர். 

அதன்பேரில் பிடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. 

தேர் இரவு 7 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. நடுரோட்டில் தேரை நிறுத்தி பொதுமக்கள் நடத்திய இந்த மறியல் போராட்டத்தால் தென்காசி-மதுரை மெயின் ரோட்டில் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

மறியல் போராட்டம் முடிந்து தேர் நிலைக்கு சென்றபிறகே அவ்வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதனால் தென்காசி-மதுரை மெயின்ரோட்டில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: